சாதிப்பெயரை விடுதலை ஏட்டில் போட்டு மகிழ்ந்த ஈ.வெ.இராமசாமி!
சாதிப் பெயரை விடுதலை ஏட்டில்
போட்டு மகிழ்ந்த ஈ.வெ.இராமசாமி!
===================================
கோயம்புத்தூர் மேம்பாலத்திற்கு "ஜி.டி.நாயுடு " என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.
எதற்கெடுத்தாலும் இது "பெரியார் மண்" என்று சொல்லக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சாதிப் பெயர்கள் மீது மண் மூடி போட்டு புதைக்க விரும்பாதவர்.
சாதிப் பெயர்கள் இருந்தால் தான் சாதி ஓட்டுகள் நமக்கு விழும் என்று கருதுகிறார். அதனால்தான் "ஜி.டி.நாயுடு" என்று துணிச்சலாக அவரால் அறிவிக்க முடிகிறது.
இது ஈ.வெ.இராமசாமிக்கு ஸ்டாலின் செய்கிற துரோகம் என்று தயவுசெய்து கருதி விட வேண்டாம்.
ஈ.வெ.இராமசாமியே சாதி ஒழிப்பு விசயத்தில் நடைமுறையில் இரட்டை வேடம் போட்டவர் தான்.
சாதி ஒழிப்பு போராளி என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஈ.வெ.ராமசாமி தன்னைத் தவிர எவரும் சாதி ஒழிப்பில் கிடையாது என்று காட்டுவதற்காகவே மற்றவரை சாதிப் பெயரை விடுதலை ஏட்டில் போட்டு மகிழ்வார்.
ஈ.வெ.ராமசாமி சாதிப் பெயர் போட்டு விடுதலை ஏட்டில் மகிழ்ந்த ஒருவர்தான் ஜி.டி. நாயுடு!.
கோபால் துரைசாமி என்று ஒருபோதும் விடுதலை ஏட்டில் எழுத மாட்டார். ஜி.டி.நாயுடுவே விரும்பி போட்டுக் கொண்டாலும், அதை திருத்த வேண்டிய பொறுப்பு ஈ.வெ.இராமசாமிக்கு உண்டு.
அப்படி வாழ்நாளில் ஒருவரைக் கூட சாதி பெயரை போடக்கூடாது என்று திருத்தும்படி சொன்னதில்லை. ஈ.வெ.ரா. தான் நடத்திய கள்ளக்குறிச்சி சாதி ஒழிப்பு மாநாட்டில் கூட தலைமை தாங்கிய ஒருவரை சாதிப் பெயரை போட்டுதான் விடுதலை ஏட்டில் செய்தி வெளியிட்டார். ஈ.வெ.ராமசாமி பேசிவந்த சாதி ஒழிப்பு இலட்சணம் இவ்வளவுதான்.
அந்த விசயத்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.
எவர் சாதிப் பெயரை போட்டுக் கொண்டாலும் சாதிப் பெயரை நறுக்கி விட்டுதான் தென்மொழி ஏட்டில் வெளியிடுவார்.
ஜி.டி.நாயுடு பெயரை கோ.துரைச்சாமி என்றுதான் தனது தென்மொழி ஏட்டில் எழுதுவார்.
ஈ.வெ.ராமசாமியின் பிராமணீய எதிர்ப்புக் கொள்கையை உண்மை என்று அப்பாவித்தனமாக நம்பியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்.
அவராலே விடுதலை ஏட்டில் தொடர்ந்து சாதிப் பெயர்கள் வருவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
1966ஆம் ஆண்டு விடுதலை ஏட்டில் விடுதலையில் " சாதி " என்று தலைப்பிட்டு நாள் வாரியாக குறிப்பிட்டு தனது "தென்மொழி" ஏட்டில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அது பின்வருமாறு:
'விடுதலை'யில் 'சாதி'
நாம் ஒரு தவற்றைப் பிறர்க்குச் சுட்டிக்காட்டித் திருத்தம் செய்து கொண்டு வருங்கால், நாமே அத்தவற்றைச் செய்யாமல் இருக்கிறோமோ என்று விழிப்புடன் பார்த்துக் கொள்ளல் வேண்டும். 'நான் சொல்வது போலச் செய்; ஆனால் நான் செய்வது போலச் செய்யாதே (Do as I say, but don't do as I do) என்று பொது மக்களிடம் சொல்லுதல் கூடாது.
'ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு?'
என வள்ளுவர் கேட்டிருக்கின்றார். பொதுவான மாந்தனுக்கே இந்த இலக்கணம் என்றால் பொதுத்தொண்டு, குமுகாயச் சீர்திருத்தம் செய்ய வேண்டியவர்களுக்கோ இக்கண்ணோட்டம் மிகுதியும் வேண்டும்.
பெரியார் ஈ.வே.இரா. அவர்களின் இயக்க இதழாக நடந்து வரும் 'விடுதலை', தமிழகத்தின் தன்மதிப்புக் கழக ஏடாகும்.
பகுத்தறிவுக்கேற்ற செய்திகளுக்கும், குமுகாயச் சீர்திருத்தச் செய்திகளுக்குமே இன்றியமையாமை காட்டி வெளிவரும் ஏனெனில் 'விடுதலை' இதழில், சாதிப் பெயர்கள் வருவது வருந்தற்குரியதுமட்டுமன்று; கண்டித்தற்குரியது.
ஏனெனில் 'விடுதலை' கொண்ட குமுகாயத் திருத்தங்களுள் சாதி யொழிப்பும் தலையாய வேலை யில்லையா?
எடுத்துக் காட்டாகக் கடந்த சில 'விடுதலை' இதழ்களில் வந்த 'சாதி'ப் பட்டங்கள் நம்மை மிகவும் வருந்தவும் நாணவும் செய்கின்றன.
பெரியாரவர்கள் 4-10-66 அன்று குடியேற்றத்தில் பேசவிருந்த விளம்பரத்தில் "எம்.வி.சாமிநாத முதலியார் தலைமையில் பெரியார் பேசுவார்" என்று வெளியிட்டிருப்பதும், 13.9.66 அன்றைய தாளில் 29.8.66 அன்று மாத்தூரில் பெரியார் தலைமையில் நடந்த திருமணத்தில் திரு. சகதீச முதலியார் அவர்களும் பேசினார் என்று வந்திருப்பதும், பெரியார் விழாக்குழுவின் பெயர்களை வெளிப்படுத்திய பட்டியலில் (4.10.66) திரு. ஏ.எசு.சி., உலூர்துசாமிப் பிள்ளை, திரு.டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, திரு.அ.வெ.ரா.கிருட்டிணசாமி ரெட்டியார் முதலியவரும் உளராகக் காட்டியிருப்பதும், 'விடுதலை'யின் சாதியொழிப்புக் கொள்கைக்கு இழுக்கைத் தேடுவனவாகும்.
உலூர்துசாமி, நாராயணசாமி, கிருட்டிணசாமி என்று திருத்தி வெளியிடுவதால் அவர்கள் எல்லாரும் வருந்துவார்கள் என்றால் ஈ.வே.இராமசாமி நாய்க்கர் என்று தினமணி, சுதேச மித்திரன் வெளியிடுவதற்காகப் பெரியார் மகிழ்கின்றார் என்பது பொருளா? அல்லது வருந்துகின்றார் என்றால் அதில் என்ன பொருளிருக்கிறது?
இங்கெடுத்துக் காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுகள் இரண்டே! ஒவ்வொரு நாளும் விடுதலையில் இத்தகைய சாதிப்பட்டங்கள் எவர் பெயருடனாவது ஒட்டிக்கொண்டுதாம் வருகின்றன.
இது பெரும்பாலும் ஆசிரியர் பிழையாகும். இத்தவற்றைக் கவனித்து உடனே திருத்திக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம். இல்லையேல் இது பெரியாரின் கொள்கைக்குப் பேரிழுக்காகும் என்பது சொல்லித் தெரிதல் வேண்டா.
நன்றி:
தென்மொழி, சுவடி-4, ஒலை-9, (1966)
Comments
Post a Comment