சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய பெரியார்

சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய ஈ.வெ.ரா.
=========================

1965ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாளில்  இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்திமொழி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதற்கு முன்பே தமிழ்நாட்டில் இந்தி மொழி ஆட்சி மொழியானால் தமிழுக்கு ஆபத்து நேரும் என்பதை தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தலைவர் அண்ணா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பரப்புரை செய்து வந்தனர்.

அன்றைய காலத்தில் தென்வியட்நாமில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக புத்த பிக்குகள் தீக்குளித்து தமது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்ட அரியலூர் கீழப்பழுவூர் ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற இளைஞர் தமிழ்மொழி காக்க தீக்குளிப்பதைத் தவிர வேறு வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார். 
 
அதற்கு முன்பு நண்பர் நாகராசனுக்கும் குடும்பத்தினருக்கும் இரண்டு கடிதங்கள் எழுதினார்.

"தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன்.. இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்புங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்".

        - சாகப்போகும் சின்னசாமி

என்று அக்கடிதத்தில் எழுதிவிட்டு, 
 திருச்சி தொடர்வண்டி நிலையம் நோக்கி நடந்தார். 25.1.1964 அன்று தமிழ் வாழ்க! இந்தி ஒழிக என்று முழக்கமிட்ட படி தனது உடலுக்கு தீ மூட்டினார். 

சின்னச்சாமியின்  ஈகச்சாவு  அன்று தமிழ்நாட்டையே உலுக்கியது. அவர் பற்ற வைத்த முதல் நெருப்புதான் 1965 ஆம் ஆண்டு மொழிப் போருக்கு மாணவர்களை தூண்டும்படி செய்தது.

ஒட்டு மொத்த தமிழ்நாடும் தில்லி காங்கிரஸ் அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக அணி திரண்டபோது, தில்லி அரசுக்கு முட்டுக் கொடுத்து மாணவர்களை சுடும் படி வேண்டிக் கொண்டவர் தான் இந்த ஈ.வெ.ரா.

தன்னிடமிருந்து பிரிந்து சென்ற திமுகவை ஒழிப்பதற்காகவே கங்கணம் கட்டிக் கொண்டு 17 ஆண்டுகள் செயல் பட்டார்.

திமுக மீது கொண்ட வெறுப்பினால், கண்ணீர் துளி பசங்க" என்றும், கண்ணீர் துளிக் கட்சி என்றும் எழுதுவதை வழக்கமாக்கி கொண்டார்.

திமுக மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பின் வெளிப்பாடாக கீழப்பழூவூர் சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப் படுத்தவும் தயங்கவில்லை.

1938 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் இராசாசி அவர்கள்,  தாளமுத்து- நடராசன் ஆகியோரை குறிப்பிட்டு  " படிப்பறிவு இல்லாதவர்கள்"  நடத்தும் போராட்டம் என்றார். 

இராசாசி வழியில் ஈ.வெ.ரா. அவர்களும் சின்னச்சாமி மூன்றாம் வகுப்பு படித்தவர், அவர் ஏதுமறியா அப்பாவி , எழுதும் ஆற்றல் இல்லாதவர் என்று தமது விடுதலை ஏட்டில் கிண்டல் செய்தார்.

சின்னச்சாமி திமுக உறுப்பினர் இல்லை என்றும், அவர் சாகும் போது எழுதிய கடிதத்தில் தான் திமுக என்று எங்குமே குறிப்பிட வில்லை என்று கொச்சைப் படுத்தினார்.

தனது நண்பர் நாகராசனிடம் வாங்கிய பணத்தை கொண்டு சென்னைக்கு ஓடி விட்டார் என்றும், பிறகு இவரை நேரில் கண்ட நண்பர் நாகராசன் "முதலியார் வாள்" என்று சொன்னதால், வெட்கித் தலை குனிந்தார் என்றும், தனது தாயிடம் வாங்கிய பணத்திற்காக திட்டு வாங்கினார் என்றும் பச்சைப் பொய்யை புழுகினார்.

சின்னச்சாமி தி.மு.க. ஆதரவாளராக கூட இருந்து விட்டு போகட்டுமே, தன் மகளுக்கு "திராவிடச் செல்வி" என்று பேர் வைத்ததை ஈ.வெ.ரா. என்ன சொல்வார்? 

ஈ.வெ.ரா. திணித்த திராவிட கருத்தை ஏற்றுக் கொண்டதால் தானே, "திராவிடச் செல்வி"  என்று பெயர் வைக்க சின்னச்சாமியால் முடிந்தது. இது ஈ.வெ.ரா.விற்கு நன்கு தெரியும். ஆனாலும்  " தமிழ் வாழ்க" என்று சின்னச்சாமி கடிதம் எழுதியதை இவரால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அவரின் பார்வையில் தமிழ் காட்டுமிராண்டி மொழியல்லவோ? 

ஈ.வெ.ரா. வின் திமுக எதிர்ப்பும், தமிழ்மொழி மீதான வெறுப்புமே சின்னச்சாமியை கொச்சைப்படுத்த காரணம் என்பதை இதன் மூலம் யூகிக்க முடிகிறது.  

9.3.1964ல் விடுதலை ஏட்டில் "சின்னச்சாமி யார்" என்ற தலைப்பில் வெளி வந்த கட்டுரையை அப்படியே இணைத்துள்ளேன்.

தீ குளித்த சின்னச்சாமி யார் ?கிடைத்துள்ள உண்மைத் தகவல்கள்! 
=============================

அரியலூர்,மார்ச் 9 -

திருச்சியில் சின்னச்சாமி என்னும் வாலிபர் தீக்குளித்ததைப் பற்றி பலரும் பலவிதமாக ஆதாரமற்ற வதந்திகளை பத்திரிகைகளின் மூலமாகவும் மேடை பேச்சுகளின் மூலமாகவும் பேசுகிறார்கள். எழுதியும் வருகிறார்கள் .

சட்டமன்றத்திலும் இந்தப் பிரச்சனை அடிபடுகிறது . இந்த பிரச்சனை பற்றி அரியலூருக்கு ஏழாவது மைலிலுள்ள  சின்னச்சாமியின் சொந்த ஊராகிய கீழப்பழுர் என்ற கிராமத்திற்குச் சென்று விசாரித்து தகவல்களை அப்படியே "ஜனசக்தி"  நிருபர் எழுதுகிறார் .

சின்னச்சாமி என்னும் வாலிபர் மூன்றாம் வகுப்பு வரை படித்தவர். அவருக்கு தாயும் மனைவியும் ஒரு குழந்தையும் உண்டு. சொந்தமாக ஒரு விதம் 1/2  ஏக்கர் நிலமும் உண்டு. 

ஆகையால் சின்னச்சாமி அன்றாடம் கூலி வேலைக்குப் போவதுண்டு. குடும்பத்தை சமாளிக்க சின்னச்சாமி போலீஸ் வேலைக்குப் போக முயற்சிகள் செய்து வந்ததாகத் தெரிகிறது.  குடும்பத்தில் கொஞ்சம் கடன் தொல்லையும் உண்டு .

அமைதியானவர் ஆனால் - அப்பாவி
============================ 

சின்னச்சாமி மிகவும் சாதுவான பையன் . ஆனால் அப்பாவி! யார் எதைச் சொன்னாலும் சுலபமாக நம்பும் சுபாவம் படைத்தவர் கீழப்பழுர் க. து. செயலாளர் நெருங்கிய நண்பர் ராம் .

ஆனால் சின்னச்சாமி க.து. அங்கத்தினர் இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது.  க.து. செயலாளரின் நண்பர் என்பதை தவிர சின்னச்சாமி சாகும் வரையில்  உறுப்பினராக சேரவில்லை என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளது . ஆனால் !

சின்னச்சாமி தீக்குளிப்பதற்கு முன் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்களில் ஒன்றில் கூட தான் 
க. து. உறுப்பினர் என்றோ, அல்லது திமுகவின் அனுதாபி என்றோ குறிப்பிடவில்லை , என்பது மட்டுமல்லாமல் தன்னுடைய நண்பர்களைத் தவிர வேறு எந்த க.து. தலைவர்களுக்கும் கடிதம் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

குடும்ப நிலைமையைச் சமாளிக்க போலீஸ் வேலைக்குப் போக முயற்சி செய்த சின்னசாமி க.து. உறுப்பினராக இருந்திருப்பாரா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம் .

உண்மை என்ன ?
=============

உண்மையிலேயே நடந்ததுதான் என்ன ?

சின்னச்சாமி இடம் அவர் நண்பர் நாகராசன் ரூ 75.00 பணத்தை கொடுத்து அந்த ஊர் கிராம அதிகாரியிடம் கொடுத்து வரச் சொன்னாராம். அதை சின்னச்சாமி எடுத்துக்கொண்டு சென்னை வந்து விட்டார் வேலை தேடுவதற்கு.

ஆனால் சின்னச்சாமி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தவுடன் சின்னச்சாமியின் நண்பர் பணம் கொடுத்தவர் சின்னச்சாமியைப் பார்த்தவுடன் கிண்டலாக என்ன "முதலியார்வாள்" என்று ஒரே வார்த்தை தான் கூறினாராம். 

இந்த கிண்டல் வார்த்தையைக் கேட்ட சின்னச்சாமி வெட்கி தலை குனிந்து தன் வீடு சென்று தாயாரிடம், "அம்மா நான் போலீஸ் வேலைக்காக நாகராசன் பணத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டேன், இப்பொழுது நாகராசனுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தாயாரிடம் கூறிய பொழுது,  அவர் 'உனக்கு இதே பிழைப்பாகப் போய்விட்டது நீ எக்கேடாவது கெட்டுப் போ, நாகராசனிடமே பண்ணையடித்து சாவு"  என்று சலிப்போடு கூற, அதற்குப் பதில்  சின்னசாமி தாயாரைப் பார்த்து "அம்மா ? நான் செத்தால் உனக்கு சந்தோஷம் தானே " என்று கூறிவிட்டு மனைவியிடத்தில் "நான் செத்தால் நீ அழுவாயா?"  என்று கேட்டுவிட்டு குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து விட்டு திருச்சி சென்றான் சின்னச்சாமி. பிறகு தீக்குளித்த செய்தி தான் அவர்களின் குடும்பத்தாருக்கு கிடைத்தது .

பிரேத அடக்க நிலை :
================

செய்தி கிடைத்தவுடன் சின்னச்சாமியின் தாயாரும் மனைவியும் திருச்சி சென்று சின்னச்சாமியின் கோரக்காட்சியைப் பார்த்தார்கள். 

அவர்களிடம் பிரேதம் ஒப்படைக்கப்பட்டது . அவர்கள் இனி பிரதேதத்தை நாங்கள் எடுத்துச் சென்று என்ன செய்யப் போகிறோம் என்று போலீசாரின் துணைகொண்டே பிரேதத்தை அடக்கமும் செய்துவிட்டனர் .

கடிதங்கள் மர்மம் .
==============

சின்னச்சாமி எழுதியதாகத் கூறப்படும் கடிதங்கள் அவரால் எழுதப்பட்டவைகள் அல்ல, அவருக்கு அந்த அளவு கடிதங்கள் எழுதும் ஆற்றல் இல்லை என்று இங்குள்ளோர் கூறுகிறார்கள். 

கீழப்பழுரில் கண்டனக் கூட்டம் போட்டு குடம் குடமாக முதலைக்கண்ணீர் வடித்தனர் க.து.க்கள். 

ஆனால் அவருடைய தலைமைக் கழகம் மட்டும் இன்றுவரை சின்னச்சாமிக்காக எந்தவித அனுதாபமும் காட்டியதாகத் தெரியவில்லை .

காரணம் அப்படி அனுதாபமும் காட்டினால் சின்னச்சாமியை தற்கொலைக்கு தூண்டிய குற்றம் தங்கள் மேல் வந்துவிட்டால் கட்சிக்கு பலவீனமென்ற பயம் தான் காரணமாக இருக்க வேண்டும் .

நன்கொடை கிட்டவில்லை 
=====================

சின்னச்சாமியின் பரிதாப செய்தியைக் கேட்ட எம்.ஜி.ஆர் தானாகவோ கழகத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கவோ சின்னச்சாமியின் குடும்பத்திற்கு நன்கொடையாக ரூபாய் 5000 த்திற்கு ஒரு செக் கொடுத்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. 

எம்.ஜி‌.ஆர். கொடுத்த செக் இன்று வரை கிடைக்காததற்குக் காரணம் சின்னச்சாமி மரணம் அடைந்த 16 வது நாள் சடங்கிற்குள் க.து.வின் தலைவர்களில் சிலர் சின்னச்சாமியின் தாயாரையும் மனைவியையும் சின்னச்சாமி திமுக தான் என்று பத்திரிக்கைக்கு ஒரு அறிக்கை எழுதி  அதில் கையெழுத்திடும்படி கேட்டதற்கு அவர்கள் மறுத்து விட்டார்களாம் .

அவர்கள் கையெழுத்திட மறுத்து விட்ட பின் எம்.ஜி.ஆரின் செக் கலைஞரின் கைக்கு மாறிவிட்டதாம் .

தலை கீழ்ப் பாடம் 
===============
இதுவரை சின்னச்சாமியின் தற்கொலையை போஸ்டர் போட்டு தேர்தல் ஓட்டு வேட்டைக்கு பிரயோஜனப் படுத்திக் கொண்டவர்கள்  தேர்தல் முடிந்தவுடன் திடீரென்று பிளேட்டை மாற்றி க.து. எம்.எல்.எக்கள் சட்டசபையில் சின்னச்சாமியின் செயலை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

நிற்க. சின்னச்சாமி "க.து."  என்று இதுவரை தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்படவில்லை.

சின்னச்சாமியின் தாயாரிடமும் மனைவியிடமும் சின்னச்சாமி க.து.தான் என்று எழுதி அறிக்கை விட முயன்றது தோல்வியுற்றது. 

-விடுதலை ஏடு
9.3.1964.

- கதிர் நிலவன் 

Comments

Popular posts from this blog

சித்தூர் கிளர்ச்சியை விட பிள்ளையார் சிலை உடைப்பே எனக்கு முக்கியம்! - - -பெரியார் ஈ.வெ‌.இராமசாமி

அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.