விருதுகளுக்கு தலை வணங்காப் போராளி பாவலர் இன்குலாப்!
விருதுகளுக்கு தலை வணங்காப் போராளி பாவலர் இன்குலாப்!
===========================
தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளுள் முதன்மையானவர்கள் கவிஞர்கள் இன்குலாப்பும், ஈரோடு தமிழன்பனும் ஆவார்கள்.
இதில் கவிஞர் இன்குலாப் இடதுசாரி சிந்தனை மரபில் ஊறி வளர்ந்தவர். மார்க்சிய - லெனினிய வழியில் தமிழ்த் தேசிய விடுதலை பேசியவர். தமிழீழ விடுதலையை முழு மூச்சாக ஏற்றுக் கொண்டவர். தமிழீழ தேசியத் தலைவரை நேரில் சந்தித்து நான் சந்தித்த தலைவர்களில் சிறந்த தலைவர் என்றவர். ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்கள் பக்கம் நின்று ஓங்கி குரல் எழுப்பியவர் . ஆளும் அரசுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமரசமற்ற போராளி.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். புதுக் கவிதை மரபில் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பங்காற்றியவர். தொழிலாளர் உரிமை, திராவிட இயக்க சீர்திருத்த சிந்தனைகளை வரித்துக் கொண்டவர். தமிழ்த் தேசியத்தை விட்டுக் கொடுக்காதவர். ஈழ விடுதலைக்கு குரல் கொடுத்தவர். தமிழ்த் தேசிய தன்னுரிமை மாநாட்டில் ஈழ விடுதலைக்கு எதிரான இந்திய தேசியத்தை தோலுரித்து குரல் எழுப்பியவர்.
இரண்டு கவிஞர்களும் கொள்கையில் ஒன்றுபட்டாலும் மாறுபடும் இடமும் உண்டு. அது ஆளும் அரசுகள் கொடுக்கும் விருதுகள் ஆகும்.
பாவலர் இன்குலாப் விருதுகளை முற்றிலும் புறக்கணித்தவர் அல்ல. ஆனாலும், விருது, பாராட்டு இவையெல்லாம் ஒரு கலைஞனுக்கான, கவிஞனுக்கான அங்கீகாரம் அல்ல. தான் வாழும் சமூகத்தில் உள்ள மக்களின் துயர்களை, வலிகளைப் பேசுவதுதான் ஒரு ஆகப்பெரிய அங்கீகாரம்" என்பார்.
2006 -ஆம் ஆண்டு "கலைமாமணி' விருது வழங்கப்பட்டபோது, ஈழத் தமிழர்களைக் காக்க தமிழக அரசு காக்கத் தவறிவிட்டதாகக் கூறி, அந்த விருதை அவர் ஏற்க மறுத்து விட்டார்.
பாரதி!
வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை...
பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை....
இந்த அரசு அங்கீகரிக்கும்.
என்று அவர் பாரதிக்கும் மட்டும் பாடாமல் தனக்கும் பாடி வைத்தார்.
அவர் மறைந்த பிறகு, 2017ஆம் ஆண்டு அவர் எழுதிய" காந்தள் நாட்கள்" நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது. இது ஈழத் தமிழர்களின் வலியைக் கூறும் நூலாகும்.
அந்த விருதை அவர் குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டனர். கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் கூறும்போது, “அரசினால் அளிக்கப்படும் இவ்விருது ஓர் அங்கீகாரமாகலாம். இன்குலாப் அரசினால் தரப்படும் எவ்விருதையும் வாழும் காலத்திலேயே ஏற்க முடியாது என மறுத்துள்ளார். இன்குலாப் விருப்பப்படி இவ்விருதை நாங்கள் ஏற்கவில்லை” என்று தெரிவித்தனர்.
கருணாநிதி ஆட்சியில் தான் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் துயரம் நடைபெற்றது. அதை மறைக்கும் வகையில் தமிழ்மொழிக்கு செம்மொழி மாநாடு நடத்தினார். ஈரோடு தமிழன்பன் அந்த மாநாட்டில் கலந்து கொண்டார். கருணாநிக்கு புகழாரம் சூட்டிப் பாடினார். அவருக்கு
"இல்லாவிட்டால் கோபாலபுரத்து வீட்டை கொடையாக தர முடியுமா?
அந்த அவ்வையார் காலத்தில் இவர் இருந்திருந்தால்
அந்த அதியமான் ஏமாந்திருப்பார்.
அவருடைய சங்கப் பாடல்களுக்கெல்லாம்
கலைஞர் சபாநாயகர் ஆகியிருப்பார்.
அந்த நெல்லிக்கனி இன்று இருந்தால் கலைஞர் யாருக்கு கொடுப்பார்?
வாலிக்கா? வைரமுத்துவுக்கா? அப்துல் ரகுமானுக்கா? இல்லை எனக்கா?.
எங்களில் யாருக்கும் தரமாட்டார்.
தமிழ்த்தாய்க்கு தந்து அவள் தின்று துப்பிய விதைகளை
ஒவ்வொரு கவிஞரின் வீட்டு வாசலிலும் விதைத்து வைப்பார்.
கவிதையை ஜனநாயகப்படுத்தியவர் கலைஞர்.
அதனால்தான் கவிஞர்களும் கலைஞருக்கு வாக்களிக்கிறார்கள்!''"
என்று கருணாநிதியின் மனதை குளிர்வித்தார்.
பாவலர் இன்குலாப் அவர்களோ செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்து கருணாநிதியைச் சாடி பாடல் தீட்டினார் .
"குருதி சொட்டும் செம்மொழி
அறைகூவல்களாலும்
ஆரவாரங்களாலும்
பொருள் தொலைந்து
பழங்காட்சியகத்தில்
பாராட்டப்படும்
ஒலிக்கூடுகளில்
எதில்
இந்த நினைவைப் பதிவேன்?
இவை
விடை வேண்டும் கேள்விகள்
தன்னை வைத்து விளையாடும்
வித்தகர்களின்
சதுரங்கப்பலகையிலிருந்தும்
விரைந்து விற்றுக்கொண்ட
கலாநிதிகளின்
ஆய்வாழங்களிலிருந்தும்
அதிகாரத்தின் கடைக்கண் பார்வைக்கு
அடிபெயர்ந்த நெடுமரமாய்ச்
சாய்ந்து கிடக்கின்ற
கவிஞர் பெருமக்களின்
பேனா முனைகளிலிருந்தும்
விலகி,
வெகு தொலைவில்
முள்ளிவாய்க்கால் கரையில்
அலைந்து கொண்டிருக்கிறது
என் உண்மையான தாய்மொழி
குருதி கொட்டும்
செம்மொழியாய்….
இன்குலாப்பை போல ஈரோடு தமிழன்பன் அரசு விருதுகளை புறக்கணித்தவர் அல்ல. கருணாநிதி செம்மொழி விருதை முதல்வர் ஸ்டாலினிடமும், சி.பா.ஆதித்தனார் விருதை நரேந்திர மோடியிடமும் பெற்றுக் கொண்டவர். " வணக்கம் வள்ளுவ " நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்.
இதைச் சொல்வதற்கு காரணம் ஈரோடு தமிழன்பன் புகழை மறைப்பதற்கோ, குலைப்பதற்கோ அல்ல. ஆளும் அரசுகள் தங்கள் குற்றத்தை மறைப்பதற்காக தனது கொள்கை எதிரியாளருக்கு கூட விருதுகள் வழங்கிடும்.
ஈரோடு தமிழன்பன் தமது கொள்கை நிலைப்பாட்டில், பாவலர் இன்குலாப் போல உறுதியாக நின்று, முள்ளிவாய்க்கால் இனத் துரோக குற்றவாளிகளை அடையாளம் காட்டத் தவறிவிட்டார் , இதில் சறுக்கி விட்டார் என்பதை சுட்டிக் காட்டவே இதை எழுத நேர்ந்தது.
ஈரோடு தமிழன்போடு இன்குலாப்பை ஒப்பிடுகையில், கவிஞர் இன்குலாப் விருதுகளுக்கு தலை வணங்கா போராளி என்பதை உறுதியாகக் கூறலாம்.
Comments
Post a Comment