உடைபடும் ஈ. வெ.ரா.வின் போலி பிம்பம்!
உடைபடும் ஈ.வெ.ரா.வின் போலி பிம்பம்!
2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு பெரும் வீச்சாக எழுந்த திராவிட எதிர்ப்புக் கருத்தியல் தற்போது பெரும் பாய்ச்சலை நோக்கி முன்னேறியுள்ளது.
ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த முன்வராத திராவிடத்தால் தில்லி அரசால் தமிழர்கள் இழந்த உரிமைகளை காக்க முன்வராது என்று உணர்ந்த இளையோர் பட்டாளம் தமிழின அடையாளத்தை மறைக்கும் திராவிடத்தை மட்டும் விட்டு வைக்க வில்லை; அதை திட்டமிட்டு பரப்பிய திராவிடப் பிதாமகன் ஈ.வெ.ரா.வின் போலி பிம்ப அரசியலையும் சமூக ஊடகங்களில் உடைக்கத் தொடங்கி விட்டனர்.
ஆரியத்துவா மோடி அரசை வெளியில் எதிர்ப்பதைப் போல பாவனை செய்து அதனோடு திரைமறைவில் கள்ள உறவு வைத்துள்ள திராவிட மாடல் அரசு ஈ.வெ.ரா.வின் பிம்பத்தைக் காட்டி தமிழ்த் தேசிய உரிமைக்கான போராட்ட எழுச்சியை வளரவிடாமல் அச்சுறுத்தி வருகிறது.
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தமிழின அடையாளத்தை மறுக்கும் ஈ.வெ.ராவின் திராவிடக் கருத்தியலுக்கு எதிராக தொடர்ந்து தக்க சான்றுகளோடு எழுதியும், சமூக வலைதளங்களில் பேசியும் வருகிறார்.
தலைவர் பெ.மணியரசன் அவர்களை தர்க்க ரீதியாக எதிர் கொள்ள முடியாத திராவிடவாதிகள் சுப.வீரபாண்டியன் , கொளத்தூர் மணி போன்றோர் சவர்க்கார் மணியரசன் என்றும், மணியரசன் அயோக்கியன் என்றும் தரம்தாழ்ந்து பேசும் நிலைமைக்கு படுகேவலமாக போய் விட்டனர்.
ஈ.வெ.ரா. பேசிய தமிழின பகைப் பேச்சுகள் அனைத்தும் விடுதலை ஏட்டின் நேரடிச் சான்றுகளாகவே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதை எதிர் கொள்ள முடியாமல் இவர்களின் கோபமும் ஆத்திரமும் தலைவர் பெ.மணியரசன் மீதும், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் திரும்பி உள்ளது. திராவிடப் பிதாமகன் ஈ.வெ.ரா. மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு மீது பதிலளிக்க முடியாத ஈ.வெ.ரா. பக்த கோடிகள் தனிநபர் தாக்குதலில் இறங்கியுள்ளது வெட்கக் கேடானது.
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் , "உன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள தாய், அக்காள் தங்கை, மகள் யாருடன் வேண்டுமானாலும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்” என்று ஈ.வெ.ரா.கூறியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுதான் ஈ.வெ.ரா. பக்தர்களின் ஆத்திரத்திற்கு காரணம்.
சீமான் அவர்கள் தெரிவித்த ஈ.வெ.ரா. கூற்றுக்கு இதுவரை சான்றுகள் கிடைக்க வில்லை.
ஆனால், சுற்றடியாகப் பார்த்தால் பெண்கள், குடும்பம், பாலியல் விடயங்களில் ஈ.வெ.ரா.வின் பார்வை எத்தகையது என்றால் , ஆணாதிக்க எதிர்ப்பு என்ற பெயரால் குடும்பத்தை உடைக்கத் தூண்டும் படியாக, கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தும் படியாக மேலை நாட்டு பண்பாட்டுச் சீரழிவிற்கு இட்டுச் செல்லும்படியாக அமைந்துள்ளது.
அதில் சிலவற்றை பார்ப்போம்.
உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப் படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அதுபோலவே தான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும். இது எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது.
('மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்'என்ற நூலிலிருந்து )
ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப் போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.
( தந்தை பெரியார் அறிவுரை - 100' என்ற நூலிலிருந்து)
"இந்தக் காதல் காரணத்தாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது.
.....இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித் தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.
("பெண் ஏன் அடிமையானாள்" என்ற நூலிலிருந்து.)
விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது. இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி
விடுவார்கள்"
(ஈ.வெ.ராமசாமி 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973)
நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, ‘Proposed Husband and Wife ‘ என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம் ? என்று கேட்டேன். ‘நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம் " என்றார்கள். ‘எவ்வளவு காலமாக ‘ என்று கேட்டேன். ‘எட்டு மாதமாக ‘ என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் ? அந்த நாடு முன்னேறுமா ? ‘பதிவிரதம் ‘ பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா ?
( ‘விடுதலை ‘ 28.6.1973 )
சுயமரியாதை திருமண முறையை அறிமுகம் செய்து அதை ஊக்குவித்த ஈ.வெ.ரா.வே அதை உடைக்கும் விதமாக திருமண மேடைகளில் பேசியதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியதைப் பார்ப்போம்.
"தந்தை பெரியார் ஒரு திருமண நிகழ்வில் திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சி.
அய்யாவிடம் ஒருவர் கேட்டார், திருமணம் கிரிமினல் குற்றம் என்றால், எல்லோரும் ஒப்புக்கொள்வார்களா அய்யா? என்று கேட்டார்.
ஏன், இதில் என்ன கஷ்டம் என்று அய்யா கேட்டார்; ஒரு மனைவி உயிரோடு இருக்கும்பொழுது, இன்னொருவரை திருமணம் செய்தால், தவறு என்று அவரை கைது செய்தார்களா இல்லையா? அது கிரிமினல் குற்றமா – இல்லையா? என்று கேட்டார். கேள்வி கேட்டவர், ஆமாம் அய்யா என்று ஒப்புக்கொண்டார். “லிவ்விங் டுகெதர்’’ (Living together); இரண்டு பேரும் சேர்ந்து வாழுவோம்; இருக்கும்வரை மகிழ்ச்சியாக இருப்போம்; சங்கடம் ஏற்பட்டால் பிரிந்துவிடுவோம்; நண்பர்கள் பிரிந்து விடுவதில்லையா? எஜமானனை விட்டு வேலைக்காரன் பிரிந்து போகிறான்; வாழ்நாள் முழுவதும் அவன் அங்கேயே வேலைக்காரனாக இருக்க வேண்டுமா?
(உண்மை இதழ், சனவரி, 2018)
இதே வீரமணி அவர்கள் ஈ.வெ.ரா. கூறியதாக ஒரு காணொளிப் பேட்டியில் சொல்கிறார்:
" பாசத்திற்காக மனுஷன் பிள்ளைப் பெற்றுக் கொள்ளனுமுன்னு அவசியமில்லையே , Enjoyment with Out Responsibility " என்று ஐயாவே அதுவும் இங்கிலீஷில் சொல்கிறார். நான் மகிழ்ச்சியடைகிறேன், அதை தூக்கிச் சுமக்கனுமுன்னு அவசியமில்லையே, அவ போனா போயிட்டு போறா" என்று கூறுகிறார்.
சேலத்தில் 1971ஆம் ஆண்டு சனவரி 23-24 ஆகிய நாட்களில் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியது . அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் வருமாறு:
"ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவதை என்பதை குற்றமாகக் கருதக் கூடாது "
(விடுதலை 25.1.1971)
மண விலக்கு பெற்ற ஆணோ, பெண்ணோ மறு திருமணம் செய்வதை எந்தச் சட்டமும் தடுக்க வில்லை . பெண் மறுமணம் செய்யும் தடைகளுக்கு எதிராகப் பேசுவதிலும் குற்றமில்லை. ஆனால் மணவிலக்கு பெறாமலே மற்றவனை விரும்புவதை குற்றமாகக் கருதக் கூடாது என்பதாகவே மாநாட்டுத் தீர்மானம் அமைந்துள்ளது.
"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு " என்கிறார் வள்ளுவர்.
அதாவது "பிறருடைய மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்." வள்ளுவர் ஒழுக்கத்தை அறமாகவும் பார்க்கிறார்.
ஆனால் ஈ.வெ.ரா.வோ பிறருடைய மனைவியை மனதால் நினைப்பதை தவறு இல்லை என்று கூறுகிறார்.
"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?
–"விடுதலை' (11.10.48)
இல்லற வாழ்வு நடத்தும் ஒரு பெண்ணை வீட்டு உப்போடும், மிளகாயோடும் ஒப்பிட்டு அவள் தனி உடைமைச் சொத்தல்ல என்றும், அவள் கணவனுக்கு மட்டுமே உரியவள் அல்ல என்றும் சொல்கிறார்.
பெண்களை அடிமைப்படுத்துவதால் திருமணமுறை தடை செய்ய வேண்டும் என்று கூறிய அதே ஈ.வெ.ரா. ஆண்களும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார்.
"ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20 - பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.
- விடுதலை" 02.03.1969
ஆண்கள் படித்து , நல்ல வருமானம் ஈட்டினால், பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொள்வார்கள் என்பதன் மூலம் பெண்களை மிகக் கேவலமான முறையில் ஈ.வெ.ரா. சித்தரிக்கிறார்.
ஈ.வெ.ரா. பெண்கள் கர்ப்பப்பையை எடுக்கும்படி சொல்லவில்லை. அவர் அதிகப் பிள்ளைகள் பெறுவதைத் தடுக்கும் பொருட்டு கர்ப்பத்தடையைத் தான் வலியுறுத்தி பேசி வந்துள்ளார் என்று ஈ.வெ.ரா.வை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர். அதுவும் உண்மை அல்ல.
"பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விருத்தியாகாது ; மானிட வர்க்கம் விருத்தியாகாது" என்று தர்ம நாயகம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாக விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம் ? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும் ? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகிவிடும் ? என்பது நமக்குப் புரியவில்லை , இதுவரை பெருகிவந்த மானுட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மை தான் என்ன என்பதும் நமக்கும் புரியவில்லை.
( குடியரசு தலையங்கம், 12.8.1928)
இயற்கை என்பது பெண்களை மறு உற்பத்திக்குத்தான் உருவாக்கியுள்ளது. அதைத்தான் தாய்மை என்று நம் முன்னோர்கள் சுட்டுகின்றனர். இயற்கைக்கு விரோதமாக குழந்தை பெறும் நிலையை மறுக்கும் போது, பெண்களுக்கே அது தீமையை விளைவிக்கும் என்றும், உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும் என்றும் மேற்குலக ஆய்வாளர்களே பலர் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
எதையும் அறிவியல் நோக்கோடு சிந்திப்பதாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட ஈ.வெ.ரா. ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெற , பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று கூறியது இயற்கைக்கும், அறிவியலுக்கும் எதிரானதே!
மானிட சமூகம் தொடக்கத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரைமுறையற்ற பாலுறவு நிலைகளை கொண்டிருந்தது உண்மைதான்.
ஆனால், குடும்பம் என்ற அமைப்பு நிலை பெற்ற பிறகு தாய், தந்தை, மகன், மகள், சகோதரர் , சகோதரி ஆகியோரோடு இருந்த பாலியல் உறவு முறையை முற்றிலும் துண்டித்து விட்டது.
ஆனால், ஈ.வெ.ரா. "உறவுமுறை" தலைப்பில் கட்டுரை ஒன்றில் கூறுகிறார்:
"இந்த உறவு முறை சம்பந்தம், கலவி சம்பந்தம் மாத்திரமல்லாமல், மற்றும் மனித ஒழுக்க சம்பந்தமான பல காரியங்களிலும், பாவ புண்ணியம் நிர்ணயிக்கவோ, நன்மை தீமை நிர்ணயிக்கவோ முடியாமல்- இதுபோலவே தேசத்துக்கு ஒரு முறை, மதத்துக்கு ஒரு தினுசு, வகுப்புக்கு ஒரு மார்க்கம், சாதிக்கு ஒரு மார்க்கம்- என்பதாகத்தான் இருந்து வருகிறது.
ஆகவே, இவ் விஷயங்களை எடுத்துக்காட்டி, ' மனிதன் எப்படி நடந்துகொள்வது?' என்னும் கேள்விக்கு, பொது அறிவும் ஆராய்ச்சியுமுள்ள மனிதன் என்ன சொல்ல முடியும் என்று யோசிக்கும்போது - "சமயோசிதம்" என்பதைத் தவிர வேறு வழிகாட்டி இருப்பதாக அறிய முடியவில்லை என்பதற்காகவே இவ்வுறவு முறை விஷயத்தை உதாரணமாக எடுத்துக்காட்ட வேண்டியதாயிற்று.
( குடிஅரசு, கட்டுரை 2. 6.1945)
மேற்படி ஈ.வெ.ரா. குறிப்பிடும் உறவு முறைகளில் தேசம், மதம், சாதி கடந்து ஒரு ஒழுங்குமுறை ஏற்பட்டுள்ளது என்ற உண்மையை ஈ.வெ.ரா. எங்கும் குறிப்பிட வில்லை.
மனிதன் எப்படி நடந்து கொள்வது என்னும் கேள்விக்கு, "தந்தை, தாய் , மகன், மகள், சகோதரர், சகோதரிகள்" ஆகியோர் தவிர என்றுதானே, பொது அறிவும், ஆராய்ச்சியும் உள்ள மனிதன் சொல்ல முடியும்?
ஆனால், ஈ.வெ.ரா. அதை " சமயோசிதம்" என்ற சொல்லால் குறிப்பது ஏன்? எதையும் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள் என்பதைத்தானே இது குறிக்கிறது.
மனித சமூகம் இன்று கற்பித்து இருக்கும் ஒழுங்கு முறைக்கும் கட்டுப்படக்கூடாது என்பதை நேரடியாகச் சொல்லாமல் "சமயோசிதம்" என்று கூறுகிறார் என்று எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தவர் ஈ.வெ.ரா. தானே தவிர மற்றவர்கள் அல்ல என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
"தமிழ் காட்டுமிராண்டி மொழி", "தமிழ் இலக்கியங்கள் உதவாக்கரை", "தேசம் ஒரு கற்பனை", "நானொரு தேசத் துரோகி", "மொழிப்பற்று , நாட்டுப் பற்று தேவையில்லை", "ஆண்மை அழியாமல் பெண்மைக்கு விடுதலை இல்லை", "கணவன் இருக்க வேறொரு ஆணை நினைப்பதைக் குற்றமாக கருதக்கூடாது" , "குழந்தைப் பேறிலிருந்து விடுதலை" போன்ற ஈ.வெ.ரா.வின் கருத்துகள் சமூக மாற்றத்திற்கு எள்ளளவும் பயன்படக் கூடியவை அல்ல , மாறாக அது பண்பாட்டுச் சீரழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதே மெய்யாலுமான உண்மையாகும்.
- கதிர் நிலவன்
Comments
Post a Comment