எங்கள் பரம்பரை விஜயநகரப் பரம்பரை என்று ஈ. வெ. ரா. சொல்லும் போது நாங்கள் மட்டும் மூவேந்தர் பரம்பரை என்று சொல்லக் கூடாதா?

எங்கள் பரம்பரை விஜய நகரப் பரம்பரை என்று ஈ.வெ.ரா. சொல்லும் போது , நாங்கள் மூவேந்தர் பரம்பரை என்று பேசக் கூடாதா?

தோழர் திருமாவளவனுக்கு பதில்!
=============================

தோழர் திருமாவளவன் தமிழ் மன்னர்களை சீண்டும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் தேவையில்லாமல் மூவேந்தர்களை வம்புக்கு இழுத்துள்ளார்.

தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் நாடு குட்டிச் சுவர் ஆனது. வடமொழியும், பிராமண ஆதிக்கமும் வந்தது , இராஜராஜ சோழன் பெயர் தமிழ்ப் பெயரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார். 

பல்லவர்கள் காலத்தில் பிராமண ஆதிக்கமும், வடமொழியும் கோலோச்சின. பல்லவர்கள் காலத்திற்கு பின் வந்த தமிழ் மன்னர்கள் காலத்தில்தான் பிராமண ஆதிக்கமும், வடமொழி ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்பட்டது .

இந்த உண்மையை எத்தனை முறை வரலாற்று ஆதாரங்களோடு சொன்னாலும் கோயபல்ஸ் வேலையை திருமாவளவன் கைவிடுவதாக இல்லை. மூவேந்தர்கள் மீது அவதூறு செய்வதில் ஈ.வெ.ரா. பேசிய திராவிடத்திற்கு சற்றும் சளைத்ததல்ல திருமாவளவன் பேசும் தலித்தியவாதம். 

இராசராச சோழனுக்கு அருண்மொழி வர்மன் என்ற பெயரும், இராசேந்திர சோழனுக்கு மதுராந்தகன் என்ற இயற்பெயரும் உண்டு .

இராசராச சோழன், இராசேந்திர சோழன் என்பதெல்லாம் பட்டப் பெயர்கள் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை. 

இராஜராஜ சோழனுக்கு தெலுங்கு குல காலன் என்ற பெயரும் உண்டு. இதைச் சொன்னால் கோபாலபுரம் கோபித்துக் கொள்ளுமோ? 

திராவிடத்திற்கு தீவட்டி பிடிக்கும் திருமாவளவனுக்கு கருணாநிதி , ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி இவையெல்லாம் தமிழ்ப் பெயரா?

இதைக் கேட்க தோழர் திருமாவளவனுக்கு முதுகெலும்பு உண்டா? ஏன், ஈ.வெ.ரா. கொண்டாடிய திராவிடாமாவது தமிழ்ப் பெயரா? கேட்கத் துணிவுண்டா? 

கோபாலபுரம் வீட்டில் யாகமும், பிராமணரும் இல்லாமல் பொழுதுகள் விடிவதே இல்லை, விலங்குகளை வைத்து விதவிதமாய் கஜ பூஜை, ஒட்டக பூஜை, பசு பூஜை என்று அத்தனை விலங்கு பூஜையும் நடைபெறாத நாளில்லை. 

இராஜராஜ சோழன் ஆட்சி மீது கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு பேசும் திருமாவளவனுக்கு கோபாலபுரத்து குடும்பத்தார் நடத்தும் வைதீக பூஜை விளையாட்டுகள் கண்ணில் படுவதே இல்லை. 

பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் ஆகியோரை "ஆண்ட பரம்பரை"  என்று தமிழர்கள் பேசுவதில் உடன்பாடு இல்லை என்கிறீர்களே?

நீங்கள் தூக்கிப் பிடிக்கும்
ஈ. வெ. ராமசாமிக்கு மூவேந்தர் என்றால் வேப்பங்காய் போல் கசக்கும் என்பது உண்மைதான்.

ஆனாலும், அவர் கூட ஒருமுறை நாங்கள் "ஆண்ட பரம்பரை"  என்று கூறியுள்ளாரே, அதுவாவது உங்களுக்குத் தெரியுமா? 

ஈ.வெ.ரா. கூறுவதைக் கேளுங்கள்;

"இவர்களாவது ( நேரு) பரம்பரை கருமாதி பண்ணி பிழைத்துக் கொண்டு இருந்த குடும்பம், என் முன்னோர்கள் என்ன அப்படிப்பட்ட பரம்பரையா?

இந்த நாட்டிலே எத்தனையோ ஆண்டு சேரன், சோழன், பாண்டிய, நாயக்கன் ஆண்டு இருக்கிறார்களே…

விஜயநகரத்திலே மதுரையிலே எங்கள் பரம்பரை ஆண்டிருக்கின்றானே ? இவைகளுக்கு இன்றைக்கும் சரித்திர ஆதாரம் இருக்கிறது.
ஆண்ட சின்னங்கள் இருக்கிறதே, மறுக்க முடியுமா?

(ஆதாரம்: சுதந்திரத் தமிழ் நாடு ஏன்? நூல். பக். 41)

தமது சொந்த இனமான விஜய நகர அரசைக் கூட  விட்டுக் கொடுக்காமல் ஈ.வெ‌.ரா.பேசியுள்ளாரே?

தங்களுடைய விஜயநகர மன்னர்கள் தான்  தமிழ்நாட்டை ஆண்டனர் என்பது  ஈ.வெ.ரா.வுக்கு நன்றாகவே தெரிந்தும் பளிச்சென்று உடைத்துச் சொன்னாரே? இது குறித்து உங்கள் கருத்தென்ன? 

தமது  தொப்புள் கொடி உறவான விஜய நகர மன்னர்களின் ஆண்ட பரம்பரை மோகம் ஈ.வெ.ரா.விற்கு இருக்கும் போது, தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளாக விளங்கும் தமிழ் மன்னர்களை "ஆண்ட பம்பரை" என்று பெருமையாகப்  பேச தமிழர்களுக்கு உரிமை கிடையாதா? 

தமிழர்கள் நாங்கள் எப்போதும் மூவேந்தர் "ஆண்ட பரம்பரை"  தான் , அப்படித்தான் உரத்துப் பேசுவோம். 

1938லும், 1965லும்  இந்தி எதிர்ப்பு மொழிப் போரில் தமிழர்கள் மூவேந்தர் கொடி ஏந்தி , மூவேந்தர் புகழ்பாடி போராட்டம் நடத்தினார்கள் என்பதாவது தெரியுமா? 

மூவேந்தர் ஏற்றிய தமிழ்க் கொடியையும் , மூவேந்தர் புகழையும் தமிழர்கள் நாங்கள் பேசாமல் வேறு யார் பேசுவது?

ஆரியமும், திராவிடமும் தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை மறைத்தும், திரித்தும் பேசி தமிழர்களை வரலாறு அற்ற  மக்களாக சித்தரிக்க முயல்கிறது.

தமிழர்களின் வரலாற்றை அழிக்க நினைக்கும் திராவிடத்தின் சதியை தமிழ்த் தேசியம் உடைத்து முன்னேறி வருகிறது. 

தமிழர்களின் வரலாற்றை தமிழ்த் தேசியம்  மீட்டுருவாக்கம் செய்து வருகிறது. இது திருமாவளவனுக்கு ஆத்திரத்தை தருகிறது. 

நீங்கள் ஈ.வெ.ரா.  பிம்பத்தை உடைத்தால், நான் மூவேந்தர் பிம்பத்தை உடைப்பேன் என்பதுதான் திருமாவளவனின் தகிடுதத்த திட்டமாகும்.

தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதத்தை உடைப்பதற்கு திராவிடத்தின் கோடரி காம்பாக திருமாவளவன் செயல்பட்டு வருகிறார். 

தமிழ்த்தேசியத்தை உதட்டில் பேசி, தலித்தியத்தை உள்ளத்தில் வைத்து , தமிழர்களிடத்தில் ஒற்றுமை வரக்கூடாது என்று நாடகம் போடுவது தமிழர்களுக்கு தெரியாமல் இல்லை ‌.

திராவிடத்தின் சூதுதனை தமிழ்த்தேசியம் அறியும், விடாது அழிக்கும்,  இறுதிப் போரில் தமிழ்த் தேசியமே வெல்லும் என்பதை தோழர் திருமாவளவன் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை. 

- கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய பெரியார்

சித்தூர் கிளர்ச்சியை விட பிள்ளையார் சிலை உடைப்பே எனக்கு முக்கியம்! - - -பெரியார் ஈ.வெ‌.இராமசாமி

அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.