தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்
தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்!
- தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார்
=============================
அன்றைய சென்னை மாகாணத்தில் சென்னை மற்றும் சென்னைக்கு அப்பால் இருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, நெல்லூர், சித்தூர் போன்ற தமிழர் பகுதிகளை ஆந்திரர்கள் அபகரிக்க முயன்றனர்.
இதற்கு எதிராக 1946 ல் தமிழரசுக் கழகத்தை தோற்றுவித்து ம.பொ.சிவஞானம் போராட்டத்தை தொடங்கினார்.
இதற்கு வலு சேர்க்கும் வகையில் சங்க இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வடக்கெல்லை பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்கள்.
1948 ல் அவர் எழுதிய "தமிழ்நாட்டு வட எல்லை" நூல் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்திற்கு பேருதவி புரிந்தது.
103 பக்கங்கள் கொண்ட அந்நூலின் கடைசி அத்தியாயத்தில் " " தமிழர் கடமை " என்ற தலைப்பில் எழுதிய பகுதியை தந்துள்ளேன்.
மா.இராசமாணிக்கனார் அவர்கள் ஆந்திரர்களை தமது சொந்த இனத்து சகோதரர்களாக கருதிய அதே வேளையில், தமிழர்களுக்குரிய தாயகப் பகுதிகளை மீட்க வேண்டும் என்ற வேட்கையை அந்நூலில் வெளிப்படுத்தியிருப்பார்.
அவரின் தாயக மீட்புக் கனவு நிறைவேறாத போதிலும், இந்நூலை படிப்பவருக்கு இன்றைக்கு வளர்ந்து வரும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு உதவும் வகையில் இழந்த மண்ணை மீட்க வேண்டும் என்ற சிந்தனை பிறக்கும் என்பது உறுதி.
தமிழர் கடமை
==============
இந்நாளில் கண்ட உண்மைகள்
சங்ககால முதல் வெள்ளையர் ஆட்சி ஏற்படும்வரை வேங்கடமே (திருப்பதியே) தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது.
தொண்டை நாடு வேங்கடம், காளத்தி, கூடூர் இவற்றைத் தன் அகத்தே பெற்றிருந்தது - தொண்டை நாடு சங்ககால முதல் வெள்ளையர் ஆட்சிவரை தமிழ் நாடாகவே இருந்துவந்தது என்பதை இலக்கியம், வரலாறு, கல்வெட்டு இவற்றைக் கொண்டு அறியலாம்.
தொண்டை நாட்டின் 24 கோட்டங்களும் அவற்றில் அடங்கிய ஊர்களும் தமிழ்ப் பெயர்களாகவே இருந்தன.
விஜயநகர ஆட்சிக் காலத்தில் சில ஊர்ப்பெயர்கள் புதிய பெயர்களைப் பெற்றன (ஆட்சி மாறுபாட்டால் ஊர்ப்பெயர்கள் மாறுதல் அடைதல் யாண்டும் வழக்கமே ஆகும்) — விஜயநகர ஆட்சியின்போது தெலுங்கு வட தொண்டை நாட்டில் ஓரளவு பரவத் தொடங்கியது.
தெலுங்கர் வடதொண்டை நாட்டில் குடியேறி நிலைகொண்டனர். அதனால்தான் தெலுங்குக் கல்வெட்டுகள் சில வட தொண்டை நாட்டில் காணப்படுகின்றன-என்பன போன்ற பல உண்மைகள் முன்சொன்ன பகுதிகளிலிருந்து எளிதில் அறியத் தக்கவையாகும்.
வட எல்லையில் மாற்றம்
======================
வட பெண்ணையாறு முதலில் தமிழகத்தின் வட எல்லையாக இருந்தது - பின், வேங்கடம் - காளத்தி என்பன வட எல்லை இடங்களாகக் குறிக்கப்பட்டன. நெல்லூர் ஜில்லாவின் தென்பகுதி-பையூர் இளங்கோட்டமாக இருந்தது.
பின்னர்த் தெலுங்குச் சோழர் ஆட்சியில் பையப்பைய மாறலாயிற்று - அதனால் தமிழ்க் கல்வெட்டுகளும் தெலுங்குக் கல்வெட்டுகளும் சில கோயில்களில் அரவிக் காண்கின்றன - நாளடைவில் ஊரிடை இருந்த தமிழ்ப் பெயர்கள் தெலுங்குப் பெயர்களாக மாறி வழங்கலாயின என்பன போன்ற செய்திகளை நடுநிலைமை யிலிருந்து இந்நாலைப் படிப்பவர் அறிந்துகொள்ளலாம்.
தென் நெல்லூர் - சித்தூர் ஜில்லாக்கள்
=====================
இந்த ஜில்லாக்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்தவை என்பது பல சான்றுகள் கொண்டு நிறுவப்பட்டது.
மேலும் உண்மை அறிய அவாவுவோர் இந்த ஜில்லாக்களில் உள்ள பழைய சோழர்க் கல்வெட்டுகளைப் படித்து உண்மையை உணரலாம்.
‘பல நூற்றாண்டுகளாக இந்த ஜில்லாக்கள் தொண்டை நாட்டினவே’ என்று பல தமிழ்க் கல்வெட்டுகள் நடுவுநிலையினின்று நமக்கு இன்றும் உணர்த்தி நிற்கின்றன.
‘நெல்லூர் ஜில்லாக்கக் கல்வெட்டுகள் - மூன்று பாகங்கள்’ வெளியாகியுள்ளன.
அவற்றில் பண்டைக்காலக் கல்வெட்டுகள் யாவை? அவை எம்மொழியில் உள்ளன? ஊர்ப்பெயர்கள் எம்மொழியில் அமைந்தன? அவ்வூர்களில் இருந்த மக்கள் யாவர்? அவ்வூர்க் கடவுளர் - திருப்பணி செய்தவர் - கோவில் பணியாளர் - இவர் தம் பெயர்கள் எம்மொழியில் இருந்தன?’ என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விடைகளை முன்னரே கண்டோம்.
‘தென் நெல்லூர், சித்தூர் ஜில்லாக்களில் வழங்கும் தெலுங்கு தூயதன்று - தமிழ் கலந்த தெலுங்கு என்று கோதாவரி, கிருஷ்ணா ஜில்லாக்களில் உள்ள தெலுங்கர்கள்
இன்றளவும் குறை கூறுவதற்கும், இந்த இரண்டு ஜில்லா மக்களையும் மாற்றாந்தாய் மக்களைப்போலக் கருதுவதற்கும் உரிய காரணம் யாது?
நெல்லூர் - சித்தூர் ஜில்லாக்கள் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நாட்டுப் பகுதிகளாக இருந்து, அண்மையில் தெலுங்கர் குடியேற்றத்திற்கு ஆளானமையே காரணம் ஆகும்.
இந்த இரண்டு ஜில்லாக்களும் தமிழகத்தின் வட எல்லைப்புறப் பகுதி ஆதலின், தமிழும் தெலுங்கும் அரவியுள்ள - தமிழரும் தெலுங்கரும் கலந்துள்ள பகுதியாக இருக்கின்றது.
அதனால் இப்பகுதியில் தூய தமிழ் வழக்கும் இல்லை; தூய தெலுங்கு வழக்கும் இல்லை. உண்மைத் தமிழ் நாட்டுப் பகுதி நாளடைவில் இம்மாறுபாடு உற்றதற்குத் தென் இந்திய வரலாறே காரணமாகும்.
ஒரு தாய் ஈன்ற மக்கள்
====================
பழைய தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் முதலிய பல மொழிகள் பிரிந்து நாளடைவில் வேறு மொழிகளாக மாறின என்பது ஒரு சார்பு மொழி ஆராய்ச்சியாளர் கூற்று.
தமிழ் தெலுங்கு - கன்னடம் - மலையாளம் என்பன மிகப் பழைய திராவிடமொழி ஒன்றிலிருந்து பிரிந்தவை என்பது மற்றொரு சார்பு ஆராய்ச்சியாளர் முடிவு.
உண்மை எவ்வாறாயினும், ‘தமிழ் - தெலுங்கு’ ஆகியவை ஓர் இன மொழிகள் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.
அஃது உண்மையாயின், இந்த இரண்டு மொழிகளைப் பேசும் மக்களும் ஓர் இனத்தவரே என்பது உண்மையாகும்.
மண்ணாசை ஒழிக!
==================
ஆகவே, இருதிறத்தாரும் ஒத்த அன்பும் நல்லெண்ணமும் உடையாராக இருந்து - அடுத்தடுத்த இடங்களில் நிலைத்து நின்று வாழ வேண்டுபவர் ஆவர்.
அதினின் இவர்கட்குள் ‘பிறர் மண்’ கவரவேண்டும் என்னும் ஆசை இருத்தல் நன்றன்று.
மண்ணடிமையால் மடிந்த மாகாணங்கள் பல; அழிந்த அரசுகள் பல; ஒழிந்த போர்க்களங்கள் பல; இஃது உலக வரலாறு உரைக்கின்ற உண்மை.
வரலாறு - இலக்கியம் - கல்வெட்டுச் சான்றுகளைக் கொண்டு நாட்டு எல்லைகள் வகுக்கப்படல் வேண்டும்.
இம்முறை தவறி, ஆள்பலம் கொண்டோ அன்றி, தோள் பலம் காட்டியோ , அல்லது பிறவாறோ தங்களுக்குச் சாதகமாக மாகாணப் பிரிவினையை ஒரு சாரார் அமைப்பாராயின், இரு மாகாணத்தார்க்கும் என்றும் அமைதி உண்டாகாது.
அதன் விளைவாக என்றும் அல்லே ஆட்சி பெறும், எல்லைப் பிரிவினையும் மண்ணடிமையுமே ஐரோப்பிய வல்லரசுகளை அழித்து வருகின்றன என்பதைக் கண்முன்னர்க் காண்கின்றோம் என்பதைத் தமிழரும் தெலுங்கரும் அறிந்து, நேர்மையான முறையில் நடந்துகொள்ளக் கடமைப்பட்டவராவர்.
இன்றைய தேவை யாது?
=======================
இலக்கியம் - வரலாறு - கல்வெட்டு இவற்றிற்கு மதிப்பீந்து உண்மை வழியில் மாகாணப் பிரிவினை வேண்டும் என்று நினைப்பின், வடபெண்ணையாறே தமிழ் மாகாணத்தின் வட எல்லையாக அமைதல் வேண்டும்.
இதுவே இயற்கை வழிப்பட்ட பிரிவினையாகும். நெல்லூர் தமிழ் மாகாணத்தின் வடமுனை நகரமாகத் திகழ்தல் வேண்டும்.'
இன்றேல், வேங்கடம் - காளத்தி ஆகிய இரண்டையும் தமிழ் மாகாண வடகோடி நகரங்களாக அமைக்கும் முறையில் தமிழ் மாகாணம் பிரிக்கப்படல் வேண்டும்.
இந்த இரண்டாம் குறிப்புப்படி தமிழ் அறிஞர் இசைதல்-அவர்களை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையையும், தம் இனத்தவராகிய தெலுங்கரிடம் கொண்டுள்ள உடன் பிறப்புப் பற்றையும் என்றும் நிலையுள்ள அமைதியை அவாவும் அருங்குணத்தையும் காட்டும் அறிகுறியாக நல்லறிஞரால் நன்கு மதிக்கப்படும்.
திருவேங்கடமும் திருக்காளத்தியும்
=============================
பல நூற்றாண்டுகளாகத் தமிழர் தம் உயிரினும் மேலாகக் கருதிப் போற்றி வந்த - போற்றி வருகின்ற திருவேங்கடத்தையும் திருக்காளத்தியையும் தமிழர் பிறர் கையில் விடுதல் தம்முயிரை விட்டு விடுதல் போலாகும்.
சங்கத் தமிழ்ப் புலவர்களால் வட எல்லை எனப் பாராட்டப்பட்டு ஆழ்வார்களால் ஏத்தெடுக்கப் பெற்ற வேங்கடமும், சைவசமயப் பெரியாராகிய திருக்கண்ணப்பர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் இவர்களால் போற்றப்பட்ட திருக்காளத்தியும் தமிழகத்தின் இரண்டு கண்கள் ஆகும்.
வைணவ-சைவ சமயங்களின் உயிர் நிலையாகும். இவற்றைப் பெற முயல்வதே தமிழர் கடமையாகும்.
இந்த ஈரிடங்களையும் தன்னகத்தே பெறும் தமிழ் மாகாணத்தைத் தமிழ் மக்கட்கு அருளுமாறு - வேங்கடத்தில் நின்ற திருக் கோலத்தில் உள்ள நெடியோனையும் “மாகமார் திருக்காளத்தி மலையெழு கொழுந்தாய் உள்ள ஏக நாயகனை”யும் இறைஞ்சுவோமாக.
- தமிழறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் எழுதிய " தமிழ்நாட்டு வட எல்லை" நூலில் இருந்து. வெளியீடு: 1948
Comments
Post a Comment